
புத்ராஜெயா, டிசம்பர் 24 – மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, பொதுமக்கள் கூடுதலாக செலுத்திய 18 பில்லியன் ரிங்கிட் வரி தொகையை, சுமார் 35.4 இலட்சம் வரி செலுத்துநர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் முழுமையாக திருப்பி வழங்கியுள்ளது.
வரி திரும்ப செலுத்தலில் ஏற்பட்ட தாமதங்களை குறைப்பதற்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
LHDN விளக்கமளித்ததன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை, 15 பில்லியன் ரிங்கிட் தொகை 35.2 இலட்சம் வரி செலுத்துநர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 9 முதல் 22 வரை, கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேலும் 3 பில்லியன் ரிங்கிட் தொகை 20,930 வரி செலுத்துநர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டது.
அரசு அறிவித்த மொத்த 4 பில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியில், இதுவரை 3 பில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக LHDN தெரிவித்துள்ளது. மீதமுள்ள 1 பில்லியன் ரிங்கிட் தொகையும் டிசம்பர் இறுதிக்குள் முழுமையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, வரி மீள்செலுத்தல் பணிகள் தடையின்றி நடைபெற, வரி செலுத்துநர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியாகவும் புதுப்பிக்கப்பட்டவையாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறு LHDN அறிவுறுத்தியுள்ளது.



