
ரவாங், ஜனவரி-16-சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஸ்ரீ சாரதா தேவி இல்லம், அதன் பராமரிப்பில் உள்ள 54 ஆதரவற்ற சிறுமிகளுக்காக நிரந்தர இல்லம் வாங்கும் நோக்கில் தொடங்கிய பெரிய அளவிலான நிதி திரட்டும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளது.
பொது மக்களின் தாராள குணத்தால் மொத்தம் RM800,000 நிதி திரட்டப்பட்டுள்ளதாக அது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அவ்வில்லத்தின் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல்லாகும்.
திரட்டப்பட்ட நிதி அனைத்தும், சிறுமிகளின் நீண்டகால பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் தொடர் பராமரிப்பை உறுதிச் செய்யும் நிரந்தர சொத்தை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், இம்முயற்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், தன்னார்வ தொழிலாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பொது மக்களுக்கும், ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் நிர்வாகக் குழு இதயபூர்வ நன்றியை தெரிவித்துள்ளது.
நன்கொடை இலக்கு நிறைவேறியுள்ளதால், கட்டடம் வாங்கும் நிதி திரட்டல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளது.
என்றாலும் இல்லத்தின் தினசரி தேவைகளான உணவு, கல்விச் செலவுகள், மருத்துவப் பராமரிப்பு மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கான ஆதரவு தொடர்ந்து வரவேற்கப்படுகிறது.
விரைவில் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்த நடவடிக்கைகள் தொடங்கப்படும் என ஸ்ரீ சாரதா தேவி இல்லம் அறிவித்துள்ளது.



