
புத்ராஜெயா, செப்டம்பர்-10 – அரசாங்கப் பல்கலைக்கழக நுழைவுக்கான UPU முறை பலவீனமாக உள்ளதாகக் கூறப்படுவதை உயர் கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட அளவீடுகள் மூலம் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலேயே பட்டப்படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
எனவே தேர்வுமுறையில் எந்த குளறுபடியும் இல்லையென அமைச்சு விளக்கியது.
STPM தேர்வில் 4.0 CGPA புள்ளியோடு புறப்பாடங்களில் 99.9% தேர்ச்சிப் பெற்ற ஒரு மாணவருக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய கணக்கியல் பட்டப்படிப்பு UPU வழி கிடைக்காமல் போன சர்ச்சை குறித்து அமைச்சு அவ்வாறு கருத்துரைத்தது.
அம்மாணவருக்கு நிர்வாகத் துறை இளங்கலைப் பட்டப்படிப்பு வழங்கப்பட்டுள்ளது – அதுவும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில்…
இதுவும் அவரின் தேர்வுதான்…. ஐந்தாவது இடத்தில் அவர் அப்படிப்பைத் தேர்வுச் செய்திருந்தார்.
ஆக மற்ற எல்லா விண்ணப்பத்தாரர்களைப் போலத்தான் இவருக்கும், தகுதி வரிசை மற்றும் விருப்பத் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இடம் வழங்கப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
என்றாலும், மாணவர் சேர்க்கை முறையை மேம்படுத்தும் பரிந்துரைகள் இருப்பின், அதனைக் கேட்கத் தயாராக இருப்பதாக அமைச்சு உறுதியளித்தது.
அத்துணை சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற அந்த மாணவருக்கே அவர் விரும்பிய பட்டப்படிப்பு கிடைக்கவில்லை என்றால், UPU முறையில் உண்மையில் என்னதான் நடக்கிறது என ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.