
ஜோகூர் பாரு, ஏப் 3 – சமூக ஊடகங்கள் மூலம் போலி பங்கு முதலீட்டு கும்பலினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக குடும்பத் தலைவி ஒருவர் 288,000 ரிங்கிட்டிற்கு மேல் இழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று தாம் ஏமாற்றப்பட்டதை 47 வயதுடைய அந்த பெண் உணர்ந்ததைத் தொடர்ந்து அவரிடமிருந்து போலீஸ் புகாரைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் Superintendan விக்டர் கணேசன் ( Victor Genason ) தெரிவித்தார். ஜனவரி 19 ஆம் தேதியன்று முகநூல் மூலம் வெளியான பங்கு முதலீடு விளம்பரத்தில் இரட்டிப்பு வருமான உத்தரவாதத்தால் ஈர்க்கப்பட்டு அது தொடர்பான செயலியை அவர் கிளிக் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம்தேதிவரை 5 வங்கிக் கணக்குகளில் 21 முறை மொத்தம்
288,235 ரிங்கிட் பணத்தை பட்டுவாடா செய்துள்ளார் என இன்று வெளியிட்ட அறிக்கையில் விக்டர் கணேசன் கூறினார். பாதிக்கப்பட்டவர் முதலீட்டு லாபத்தைத் திரும்பப் பெற கூடுதல் பணம் செலுத்தும்படி கேட்கப்பட்டதை தொடர்ந்து தனது பணம் கிடைக்காததால் தாம் மோசடிக்கு உள்ளானதாக உணர்ந்து போலீசில் புகார் செய்தார். மோசடி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரண மேற்கொள்ளப்பட்டு வருகிறது.