
கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவானது மக்களை பழைய, ஆபத்தான கட்டடங்களில் தங்கவிடாமல் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும்.
சிலர் கூறுவது போல் குடியிருப்பவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மாறாக, அதே இடத்தில் புதிய, பெரிய வீடுகளை அவர்கள் பெறுவார்கள் – முன்பு வெறும் 500 சதுர அடி வீட்டில், ஒரு படுக்கை அறை, ஒரு குளியல் அறை என்றால், இப்போது குறைந்தது 750 சதுர அடி வீட்டில், 3 அறைகள், இரண்டு குளியலறைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
தற்காலிக வீடுகளும் ஏற்பாடு செய்யப்படும்: முதலில் புதிய பிளோக் கட்டப்படலாம் அல்லது வாடகைத் தொகைச் சலுகை வழங்கப்படும். இதனால் மக்கள் விருப்பமான இடத்தில் தங்கி, புதிய வீடு தயார் ஆன பின் திரும்பலாம்.
இந்த உத்தேச சட்ட மசோதா உரிமையாளர்களின் உரிமையைப் பாதுகாக்கிறது; குறைந்தது 80% ஒப்புதல் பெற்ற பின் மட்டுமே மேம்பாடு தொடங்கும்.
இது மேம்பாட்டாளர்களுக்காக அல்ல, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக என்பதை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
எதிர்கட்சியினர் தவிர்த்து, அம்னோ, மசீச போன்ற ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளும் பொது அமைப்புகளும் இச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ங்கா கோர் மிங் அவ்வாறு கூறினார்.