
டாமான்சாரா, ஜனவரி-9,
தலைநகர், ஸ்ரீ டாமான்சாராவில் ஒரு Grab ஓட்டுநர், சக்கர நாற்காலியில் பயணித்த மாற்றுத் திறனாளி வாடிக்கையாளருக்கு உதவ மறுத்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஓட்டுநர், தன்னைக் காரினுள் ஏற்ற உதவ மறுத்ததோடு, 12 வயது மகனை தூக்கச் சொல்லியதாகவும் பாதிக்கப்பட்டவரான S. ஜெயராஜ் குற்றம் சாட்டினார்.
தவிர, அதை விட பெரிய வாகனத்தை முன்பதிவு செய்ய வேண்டியதுதானே என அங்கலாய்த்துக் கொண்டார்.
பிறகு, சக்கர நாற்காலி காரை கீறிவிடும் எனக் கூறி, பயணத்தை இரத்துச் செய்வது போல் பாசாங்கு செய்து விட்டு ஜெயராஜை ஏற்றாமலேயே அவர் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் ஃபேஸ்புக்கில் வீடியோவாக வைரலாகி, சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து பதிலளித்த Grab Malaysia, அனைத்து பயணிகளின் பாதுகாப்பும் மரியாதையும் தங்களுக்கு முக்கியம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் தொடர்பு கொள்வதாகக் கூறிய அந்நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய GrabAssist சேவை கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதையும் நினைவூட்டியது.



