Latestமலேசியா

பக்குத்தேவால் ஓயாத சர்ச்சை : அமைச்சருக்கும் அம்னோ இளைஞர் தலைவருக்கும் அறிக்கைப் போர்

கோலாலம்பூர், மார்ச் 1 – சீனர்களின் பக்குத்தே சூப், தேசியப் பாரம்பரிய உணவாக அறிவிக்கப்பட்ட சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr முஹமட் அக்மால் சாலே மற்றும் சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங்கிற்கும் இடையில் பக்குத்தே அறிக்கைப் போர் தொடருகிறது.

“ பக்குத்தே என்ற சொல்லில் பக் என்பது ஒரு பொதுவான இறைச்சியைத் தான் குறிக்கிறது. இறைச்சியைத் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். அதுவே கோழி இறைச்சி என்றால் அது ‘சிக்குத்தே’ , கடல் உணவுகள் என்றால் Seafood Kut Teh, ஆட்டிறைச்சி என்றால் Kambing Kut Teh எனப் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். ஆக எந்த இறைச்சியைப் போட்டாலும் அது சூப்பு தான். தவிர, வெறும் மூலிகைகளைக் கொண்டு தான் அந்த சூப் தயாரிக்கப்படுவதாக நான் ஏற்கனவே பல தடவை கூறி விட்டேன்” என தியோங் கிங் காட்டமாகக் கூறினார்.

ஆனால், Dr அக்மால், பக்குத்தேவை பன்றி இறைச்சியுடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பேசி, வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்புவதாக சாடிய தியோங் கிங், பக்குத்தேவின் அர்த்தத்தை உறுதிச் செய்துக் கொள்ள, அக்மால் வேண்டுமென்றால் அகராதியைப் புரட்டிப் பார்க்கலாம் என்றார்.

அண்மைய காலமாக சர்ச்சைகளில் சிக்கி வருவதால் தியோங் கிங்கை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அக்மால் நேற்று வலியுறுத்தியிருந்தது குறித்து, தியோங் இந்த ‘பதிலடியை’ வழங்கியுள்ளார்.

பன்றி இறைச்சி பக்குத்தே தேசியப் பாரம்பரிய உணவாக அறிவிக்கப்பட்டது, Tourism Malaysia-வின் தலைமை இயக்குநர் டத்தோ Dr அம்மார் அப்துல் காஃபார் துணைத் தலைமை இயக்குநராக பதவியிறக்கம் செய்யப்பட்டது போன்று விவகாரங்களைச் சுட்டிக் காட்டி, தியோங் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அக்மால் கோரியிருந்தார்.

ஓர் இளம் தலைவர் என்ற முறையில் அக்மால், பொது வெளியில் பேசும் போது பார்த்து பேச வேண்டும்; அதுவும் பல்லின மக்களையும், பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்ட நாட்டில் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்; மாறாக இனவாதத் தோரணையில் இது போன்ற சினமூட்டும் வேலைகளில் ஈடுபடக் கூடாது என அக்மாலுக்கு தியோங் அறிவுரைவழங்கினார்.

ஆக, தமக்கெதிராக அக்மால் தொடுத்து வரும் தொடர் தாக்குதல், அரசியல் நோக்கத்தைக் கொண்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புவதாக தியோங் சொன்னார்.

“ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அதை விடுத்து ஏதோ எதிர்கட்சி போலவோ அல்லது தீவிரவாதச் சிந்தனைக் கொண்டவரைப் போலவோ செயல்படாதீர்கள்” என்றும் தியோங் தனதறிக்கையில் அக்மாலைக் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!