
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – சாலைக் குற்றப் பதிவுகளுக்கான சம்மன்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தாலும் BUDI95 பெட்ரோல் சலுகை பாதிக்கப்படாது என, போக்குவரத்து அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த இரண்டு அமைப்புகளும் தனித்தனியாகும்; நேரடி இணைப்பைக் கொண்டிருக்கவில்லை.
எனவே, நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்த வரையில் உங்களின் BUDI95 மானியத் தகுதி பாதிக்கப்படாது என அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுப்படுத்தினார்.
BUDI95 பெட்ரோல் சலுகைக்கு, MyKad மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மலேசிய குடிமக்களாக இருப்பதோடு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அதாவது அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியாகாத உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகவே, சம்மன்கள் செலுத்தாமல் இருந்தால் BUDI95 பெட்ரோல் சலுகையை அனுபவிக்க முடியாது என சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதற்காக, சம்மன்களை கிடப்பில் போடக் கூடாது; டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டுள்ள கழிவுச் சலுகைகளைப் பயன்படுத்தி அபராதங்களைச் செலுத்த வேண்டும்.
காரணம், சம்மன்கள் நிலுவையில் இருந்தால் ஓட்டுநர் உரிமம், சாலை வரி போன்றவற்றைப் புதுப்பிக்க முடியாமல் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பதை அவர் நினைவூட்டினார்.



