Latestமலேசியா

13 ஆவது மலேசியத் திட்டம்: பயன் தருமா? அல்லது வெறும் வார்த்தைகளா? டத்தோ எம். பெரியசாமி, சமூக-அரசியல் ஆய்வாளர்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- 2016–2030 காலத்தை உள்ளடக்கிய 13-ஆம் மலேசியத் திட்டம் (RMK13) மலேசியாவின் மேம்பாட்டுத் திட்டத்தை  சீரமைப்போம் எனும் கருப்பொருள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, மடானி அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி அரசியல் ஆதரவாளர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த ஆதரவைப் பெறவில்லை எனலாம்.

இத்திட்டத்திற்கு மொத்தம் RM430 பில்லியன் செலவிடப்படும் எனவும், அதில் RM227 பில்லியன் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் முக்கியமான மாற்றம் என்னவெனில், இதுவரையில் நாட்டின் மேம்பாட்டுத் திட்டம் இன அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டது. ஆனால், RMK13 மலேசியத்திட்டம் சற்று மாறுபட்டு பொதுவாக மக்களின் தேவைகளை அறிந்து அதனைச் சீரமைக்கும் கொள்கையினை அணுகுமுறையாகக் கொண்டுள்ளது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் பொது நோக்குத் திட்டமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நாட்டின் மேம்பாட்டுக்குப் பல பங்களிப்புகள் செய்த இந்தியர்களின் சமூக பொருளாதார நிலை இன்னும் தேங்கியே நிற்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேம்பாட்டுத்திட்டங்கள் பொதுவாக மலேசியர்களின் வறுமை நிலை, குடும்ப வருமானம், செலவு செய்யும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே திட்டமிடப்படுகிறது. அவ்வகையிலே ஒவ்வோர் இனத்தின் வருமானம் மொத்தமாக கணிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சீனக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரி.ம. 10 656, மலாய்க்காரர்கள் ரி.ம. 6 627, இந்தியர்கள் ரி.ம. 5 793 என புள்ளி விபர இலாக அறிவிக்கிறது.

ஆனால், ஒரு தனி இந்தியனின் வருமானம் ரி.ம.1 670 லிருந்து ரி.ம. 29 400 என புள்ளி இலாகா வெளியிட்ட புள்ளி விபரமாகும். இந்தியர்களின் வருமான அளவில் பெரும் வேறுபாடு தோன்றுவதற்குக் காரணம் T20 வகுப்பைச் சேர்ந்த இந்தியர்கள் அதிகமான வருமானத்தையும் B40 வகுப்பைச் சார்ந்தவர்கள்; குறைவான வருமானத்தையும் பெறுபவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆகவே, இந்திய சமூகத்திலே காணப்படும் B40 குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களின் சமூகப்பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு RMK13 திட்டம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் சமூக நீதி.

கடந்த காலங்களில் நஜீப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது இந்தியர்களின் சமூக பொருளாதார தேவைகளை அலசி அராய்ந்து அதனைப் பத்தாண்டுக்குள் சீரமைக்க  புளூ பிரிண்ட் அல்ல்து இந்திய பெருந்திட்டம் வரையப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ஆனால், 14-ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி மாறியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும் இன்றைய ம்.இ.கா.வின் தலைமைத்துவம் இந்திய பெருந்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியர்களுக்கான ஒரு புதிய மேம்பாட்டுத்திட்டம் 2.0 தயாரித்து அதனை மடானி அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இத்திட்டம் RMK13- ல் இணைக்கப்படுமென இதிய சமூகம் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு இடம்பெறாமல் போனது இந்திய சமூகத்திற்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

எவ்வாறாயினும், ம.இ.கா.சமர்ப்பித்த ஒரு சில திட்டங்கள் RMK13 -ல் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. எடுத்துக்காட்டாக பாலர் பள்ளி மற்றும் Technical and Vocational Education and Training (TVET) திட்டங்களைக் குறிப்பிடலாம். இத்திட்டங்கள் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாக அனைத்து மலேசியர்களுக்கும் உள்ள திட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் எந்த அளவுக்கு இத்திட்டம் இந்தியர்களைச் சென்றடையும் என்பதில் இதுவரை ஏமாற்றத்தையே தொடர்ந்து சந்தித்து வரும் இந்தியர்களிடையே பெரும் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

RMK13 இல், நகரங்களிலும் கிராமங்களிலும் முன்பள்ளி கல்வி மையங்களை நிறுவும் அறிவிப்பு, கட்சிசார்பற்ற இந்தியர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் இந்தியக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி வழங்குவது அவசியமாகின்றது. இதற்காக சில இந்திய தன்னார்வ அமைப்புகள் தங்களின் சொந்த முயற்சியால் முன்பள்ளிகளைத் தொடங்கியுள்ளன. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல பாலர்பள்ளிகள் செயல்பாட்டைத் தொடர முடியாமல் போனது.

அதனால், நாடு முழுவதும் 5 வயது குழந்தைகளுக்கான பாலர்பள்ளி கட்டாயப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, இந்திய சமூகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

RMK13 இல் Technical and Vocational Education and Training (TVET) மற்றும் Science, Technology, Engineering, Mathematics (STEM) கல்வியை விரிவுபடுத்தும் திட்டங்களும் இந்திய சமூகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல இந்திய மாணவர்கள் திறமையின்மை காரணமாக அல்லாமல், பாடங்கள் தங்களின் ஆர்வத்துக்கும் திறமைக்கும் பொருந்தாததால் விஞ்ஞான மற்றும் கணித துறைகளில் மேல்நிலை, கல்லூரி அல்லது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே விலகுகின்றனர்.

இந்நிலமைகளைக் கண்டறிந்த MIC தலைமைத்துவம் , MIED வாயிலாக TVET கல்வி அடிப்படையிலான கல்லூரி தொடங்கவுள்லதாக அறிவித்துள்ளது. இது Industrial Revolution 4.0 சவால்களை எதிர்கொள்ள இந்திய இளைஞர்களைத் தயார்படுத்தும் முயற்சியாகும். அரசாங்கம் கடந்த காலங்களில் Giat MARA, Anak Angkat ILKA, மலாக்கா Proton திட்டம் போன்ற திட்டங்களைத் தொடக்கி பல TVET பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இது போன்ற திட்டங்களை இந்திய இளைஞர்களிடையே   விரிவுபடுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என ம.இ.கா. வலியுறுத்துகிறது.

RMK13 வெற்றிகரமாக செயல்படுவதற்கான முக்கிய கேள்வி – “இத்திட்டங்கள் எவ்வாறு நடைமுறையில் அமல்படுத்தப்படும்?” என்பதே.

RMK2 காலத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனல்,  செயலாக்க முறைமை பலவீனத்தால் இத்திட்டம் தோல்வியடைந்தது என்பதும் இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இது குறித்து அமைதி போராட்டம் நடந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ  S.A. விக்னேஸ்வரன், இந்திய சமூகத்துக்கான RMK13 திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த சிறப்பு சமூக-பொருளாதார மேம்பாட்டு இலாகாவை அமைக்கப் பரிந்துரைத்துள்ளார்.  இது குறிப்பாக, அதிக இந்திய மக்கள் தொகையுள்ள 38 தொகுதிகளில், B40 பிரிவினருக்கான நன்மைகளை உறுதி செய்யும்.

அதே சமயம், MITRA நிர்வாகத்திற்கப்பால், ஒரு இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை அமைத்து, RMK13 திட்டங்களை மடானி உணர்வோடு செயல்படுத்த ம.இ.கா. முன்மொழிந்துள்ளது.

முன்பு, Malaysian Indian Blueprint மற்றும் Indian Community Development Plan 2.0 போன்ற திட்டங்களை ம.இ.கா.பரிந்துரைத்தது. ஆனால், எதுவும் நடைமுறை படுத்தப்படவில்லை. எனவே, இந்த முறை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த RMK13, திட்டங்கள் இந்தியர்களுக்கு வெறும் அரசியல் பேச்சாக அல்லாமல், நடைமுறையில் செயல்படுத்தப்படும் என இந்திய சமூகம் எதிர்பார்க்கிறது எனக் கருத்துரைக்கிறார் நாடறிந்த சமூக அரசியல் ஆய்வாளரும் சமூகச் சிந்தனையாளருமான டத்தோ பெரியசாமி முத்தன்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!