
கோலாலம்பூர், செப்டம்பர்-21 – மலேசியா, 2025/2026 குளிர்காலத்தின் தொடக்கத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு லா நினா (La Nina) எனும் வானிலை நிகழ்வை எதிர்கொள்ளக் கூடும்.
மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான METMalaysia அதனைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையால், அக்காலக் கட்டத்தில் மழைப்பொழிவு பாதிக்கப்படலாம்; ஆனால் மீண்டும் அது வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செப்டம்பர் முதல் 2026 பிப்ரவரி வரைக்குமான நீண்டகால வானிலை முன்னறிவிப்பின் படி, பெரும்பாலான உலகளாவிய மாதிரிகள் எல்-நினோ (El Nino) வானிலை தற்போது வழக்க நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன.
தற்போது நாடு தென்மேற்கு பருவமழையின் இறுதி கட்டத்தில் உள்ளது.
இதனால் காற்றின் ஈரப்பதம் குறைந்து, பல இடங்களில் மழையில்லா நாட்கள் அதிகரிக்கலாம்.
இந்நிலையில் கட்டுப்பாடற்ற திறந்தவெளி எரிப்பு நடந்தால் புகைமூட்ட அபாயமும் உருவாகும்.
அதே சமயம், குறிப்பாக மேற்கு மலேசியா, வடக்கு சரவாக் மற்றும் மேற்கு சபா பகுதிகளில் பலத்த காற்றும் இடியுடன் கூடிய மழை அபாயமும் நீடிக்கும்.
இடி மின்னல் பெரும்பாலும் காலை நேரத்தில் உருவாகி, பல மணி நேரம் நீடிக்கக்கூடும் எனவும் MET Malaysia எச்சரித்துள்ளது.



