
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – நேற்றிரவு, புக்கிட் பிந்தாங்கில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், மொத்தம் 770 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
106 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில், ஜாலான் நாகசாரி மற்றும் ஜாலான் சிலோன் பகுதிகள் முழுமையாக மூடப்பட்டு, அதன் வெளியேறும் வழிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் பங்களாதேஷ், மியான்மார், நேபாளம், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று குடிநுழைவுத்துறை அமலாக்க இயக்குநர் பஸ்ரி ஒத்மான் (Basri Othman) தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலானோர் விசா காலாவதி, அடையாள ஆவணமின்மை, செல்லுபடியாகும் ஆவணகள் இன்றி மலேசியாவில் வேலை செய்தல் போன்ற குற்றங்களில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் புதிய புத்ராஜெயா குடிநுழைவுத் துறை தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆரம்ப விசாரணைகளுக்கு பின்பு தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இந்த வழக்கு குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ், விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கீகாரம் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று வலியுறுத்தப்பட்டது.