
புத்ராஜெயா, அக்டோபர்-4,
BUDI95 மானியத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில், பெட்ரோல் நிலையங்களின் செயல்திறன் தொடர்ச்சியை உறுதிச் செய்ய, RON95 எரிபொருளுக்கு APM எனப்படும் தானியங்கி விலை நிர்ணயத்திற்கான புதிய விகிதத்தை அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ ஸ்ரீ அர்மிசான் மொஹமட் அலி அதனைத் தெரிவித்தார்.
பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் நிலைய சங்கங்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, பரிந்துரை நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
APM விகிதத்தை மறுஆய்வு செய்வதே நிதியமைச்சின் தற்போதைய முன்னுரிமை எனக் குறிப்பிட்ட அர்மிசான், இதற்கு முன் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் அதிக நேரம் எடுத்துக் கொண்டதை சுட்டிக் காட்டினார்.
மானியம் பெறப்பட்ட பெட்ரோல் கட்டுப்பாட்டு திட்டத்தை மிக விரைவிலேயே அதாவது, இலக்கிடப்பட்ட உதவித்திட்டம் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் செயல்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றார் அவர்.