
கோலாலாம்பூர், செப்டம்பர்-30,
கட்சிக்குள்ளேயே இருக்கும் துரோகிகளுக்கும் வெளியில் உள்ள எதிரிகளுக்கும் பெர்சாத்து ஒருபோதும் அடிபணியாது.
அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் அவ்வாறு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் நேர்மை மற்றும் கோட்பாடுகளுடன் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
ஆனால், சில தலைவர்கள் அந்தக் கட்டொழுங்கை மீறி வெளியில் உள்ள எதிரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.
அவர்களின் அச்செயல், “உள்ளிருக்கும் முள்” போல உடனிருந்தே பின்புறம் கட்சிக்கு துரோகமிழைப்பதற்கு சமமாகுமென, மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் குற்றம் சாட்டினார்.
இந்த துரோகம் வேரூன்றி விடாமலிருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேசமயம், அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து பெர்சாத்துவை மக்களைக் காக்கும் கோட்டையாக உருவாக்க முயல வேண்டுமென, அறிக்கை வாயிலாக சஞ்சீவன் வலியுறுத்தினார்.
பொதுச் செயலாளராக உள்ள டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி, கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளில் அமர தகுதியானவர் அல்ல என, தாசேக் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைஃபுல் வான் ஜான், பெர்சாத்துவில் புயலைக் கிளப்பியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆபாச வீடியோ விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்காத வரை, பெர்சாத்துவின் தலைவர்களில் ஒருவராக அஸ்மினை ஏற்றுக் கொள்ள முடியாது என, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் வான் சைஃபுல் கூறியிருந்த நிலையில், சஞ்சீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.