
சூரிக் (சுவிட்சர்லாந்து), அக்டோபர்-7,
FAM எனப்படும் மலேசியக் கால்பந்து சங்கம் மற்றும் ஹரிமாவ் மலாயா அணியின் 7 பாரம்பரிய வீரர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையின் முழு விவரங்களை, அனைத்துலகக் கால்பந்து சங்கமான FIFA வெளியிட்டுள்ளது.
வீரர்களின் பதிவு ஆவணங்களில் உள்ள “பொய்யான மற்றும் மாற்றப்பட்ட தகவல்கள்” காரணமாக FAM விதி 22-டை மீறியதை FIFA ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டறிந்ததாக, நேற்றைய தேதியிட்ட அறிக்கையில் FIFA கூறிற்று.
வீரர்களின் தாத்தா, பாட்டி பிறப்பு சான்றுகள் FAM கூறுவது போல் மலேசியாவைச் சார்ந்ததாக இல்லை; மாறாக, அவர்கள் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் பிறந்தவர்கள் என விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டது.
இதனால், அவர்கள் மலேசிய ‘வேர்கள்’ எனக் கூறிய ஆவணங்கள் போலியானவை என FIFA தெரிவித்தது.
தேசியப் பதிவுத் துறையும், அதற்கு கிடைத்த இரண்டாம் கட்ட மூலங்களின் அடிப்படையில் சான்றுகளை உறுதிச் செய்துள்ளதே தவிர, பிறப்புப் பதிவுகள் குறித்த அசல் ஆவணங்களைப் பார்க்கத் தவறியுள்ளது.
இதை ஒன்றை மட்டுமே வைத்து, FAM மற்றும் 7 வீரர்கள் ஆவணங்கள் சட்டபூர்வமாகப் பெறப்பட்டவை என வாதிடுவதை FAM சுட்டிக் காட்டியது.
ஏமாற்றும் நோக்கம் இல்லாவிட்டாலும், ஆவணங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கத் தவறுவதும், FIFA பொறுப்புக் கோட்பாட்டின்படி, குற்றமாகவே கருதப்படும் என அச்சம்மேளனம் விளக்கியது.
எனவே தான் FAM-க்கு சுமார் RM1.8 மில்லியன் அபராதம், அந்த 7 வீரர்களுக்கும் தலா RM10,000 அபராதம் மற்றும் 12 மாதங்கள் அனைத்துலகப் போட்டி தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
FAM 30 நாட்களில் அபராதம் செலுத்தி, 3 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முழு விவரம் வெளியாகியுள்ளதால், அண்மைய FIFA நடவடிக்கை குறித்து இரசிகர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதிலாக அது அமைந்துள்ளது.
இவ்வேளையில், FIFA-வின் முழு தண்டனை விவரம் கிடைக்கப் பெற்றிருப்பதை FAM உறுதிப்படுத்தியது.
எனினும், ஏற்கனவே கூறியபடி, அனைத்து நடைமுறைகளைப் பின்பற்றியே ஆவணங்கள் பெறப்பட்டதாக மீண்டும் வலியுறுத்திக் கூறியது.
FIFA-வின் அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதையும் அது உறுதிப்படுத்தியது



