
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-20- “பன்றி இறைச்சி இல்லை, அதன் கொழுப்பு இல்லை” என்ற அறிவிப்புப் பலகைகளால் மட்டும் ஓர் உணவகம் ஹலால் சான்றிதழ் பெற்றதாக அர்த்தமில்லை என்பதை, இன்றையப் பயனீட்டாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; எதைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியுமென, கெராக்கான் கட்சித் தலைவர் டோமினிக் லாவ் (Dominic Lau) கூறியுள்ளார்.
அந்த அறிவிப்புகள் குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் தவிர்க்க வேண்டியதை அறிவதற்கு உதவுகிறது; அதனால் கட்டுப்பாட்டை விட வெளிப்படைத்தன்மை மற்றும் விழிப்புணர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
எனவே, பன்றி இறைச்சி அல்லது பன்றிக் கொழுப்புகளைப் பரிமாறாத உணவகங்கள், ஹலால் சான்றிதழ் பெற்றிருக்கா விட்டாலும், அவற்றின் முயற்சிக்காகப் பாராட்டப்பட வேண்டும் என்றார் அவர்.
ஹலால் சான்றிதழ் இல்லாத உணவகங்கள் “பன்றி இறைச்சி இல்லை” அல்லது “முஸ்லீம் தோழமை உணவகங்கள்”என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என சிலாங்கூர் இஸ்லாமியத் துறையான JAIS நினைவூட்டியிருப்பது குறித்து டோமினிக் அவ்வாறு கருத்துரைத்தார்.
2011 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் படி, பயனீட்டாளர்களைக் குழப்பும் வகையிலான எந்தவொரு சொற்றொடரும் லேபிள்களும் தவறானவை என JAIS சுட்டிக் காட்டியது. ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM-முடையதாகும்.