
கோலாலம்பூர், ஏப்ரல்-30, மலேசியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளான நாசி லெமாக், ரொட்டி ச்சானாய், சாத்தே போன்றவை கடந்த 13 ஆண்டுகளில் 2 மடங்கு விலையேற்றம் கண்டுள்ளன.
2024-ஆம் ஆண்டுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீட்டு அறிக்கையில், மலேசியப் புள்ளிவிவரத் துறை அதனைத் தெரிவித்தது.
2011-ல் வெறும் 90 சென்னாக இருந்த ஒரு ரொட்டி ச்சானாயின் சராசரி விலை, 71.1 விழுக்காடு அதிகரித்து கடந்தாண்டு 1 ரிங்கிட் 54 சென்னாக பதிவாகியது.
ஒரு தட்டு நாசி லெமாக்கோ, 2 ரிங்கிட் 3 சென்னிலிருந்து தற்போது 3 ரிங்கிட் 68 சென்னுக்கு உயர்ந்துள்ளது.
இது 81.3 விழுக்காடு விலை உயர்வாகும்.
கோழி இறைச்சி சாத்தேவின் விலையும் சளைத்ததல்ல.
2011-ல் ஒரு குச்சி சாத்தே 51 சென்னுக்கு விற்கப்பட்டது; இப்போது 113.7 விழுக்காடு அதிகரித்து 1 ரிங்கிட் 9 சென்னுக்கு விற்கப்படுவதாக அத்துறை கூறியது.
இவ்வேளையில், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்தின் விலை 139.4 விழுக்காடு அதிகரித்து, கிலோவுக்கு 6 ரிங்கிட் 92 சென்னாகப் பதிவாகியுள்ளது.
இதே 13 ஆண்டுகளுக்கு முன் அதன் விலை 2 ரிங்கிட் 89 சென் மட்டுமே.
புத்தம் புதிய தேங்காய்ப் பாலின் விலை, கிலோவுக்கு 7 ரிங்கிட் 39 சென்னிலிருந்து 11 ரிங்கிட் 54 சென்னாக உயர்ந்துள்ள வேளை, துருவியத் தேங்காய் கிலோவுக்கு 5 ரிங்கிட் 18 சென்னிலிருந்து கடந்தாண்டு 8 ரிங்கிட் 33 சென்னுக்கு ஏற்றம் கண்டுள்ளது