
கோலாலம்பூர், செப்டம்பர் 2 – கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய ஆகாயப் படை வீரரைத் (RMAF) தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை தற்போது பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.
காணாமல் போன 27 வயதான முஹம்மட் அம்மார் முகமட் அரிஃபின் (Muhammad Ammar Mohd Ariffin) இறுதியாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று சிலாங்கூர் படாங் காலி அருகேயுள்ள சுங்கை கெடொன்டோங்கில் (Sungai Kedondong) காணப்பட்டார் என்று செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஃபரித் அகமட் (Muhamad Farid Ahmad) கூறினார்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று அவர் RMAF இல் நடத்தப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்ட பின்னர் 25 ஆம் தேதி RMAFக்கு திரும்பவில்லை என்றும் 23 ஆம் தேதியன்று மூன்று நண்பர்களுடன் சுங்கை கெடொன்டோங்கில் குளிக்கச் சென்றுள்ளார் என்றும் அறியப்படுகின்றது.
வெளிர் நிறத் தோல், நேரான தலைமுடி , மற்றும் சுமார் 175 செண்டி மீட்டர் உயரம் கொண்ட காணாமல் போன ஆடவரை பற்றிய தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினரை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.