
கோலாலம்பூர், அக்டோபர்-25 – கோலாலம்பூர், சோலாரிஸில் தனியார் கராவோக்கே மையத்தில் மேற்கொள்ளப்பட்ட Ops Gegar அதிரடிச் சோதனையில், GRO எனப்படும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் கும்பல் சிக்கியது.
சோதனையின் போது அம்மையத்தின் பாதுகாவலர் ஒத்துழைக்க மறுத்ததால், அதிகாரிகள் 3 பூட்டுகள் போடப்பட்டிருந்த கதவை உடைத்தே உள்ளே சென்றனர்.
இரண்டாவது மாடியில் செயல்பட்டு வரும் அக்கேளிக்கை மையத்தை, கீழ் தள வாசலிலிருந்து படி நெடுகிலும் CCTV கேமராவால் அதன் நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
இணையம் வாயிலாக முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக வந்தோ அந்த GRO பெண்களின் சேவையை வாடிக்கையாளர்கள் பெற்று வந்துள்ளனர்.
தென் கொரியப் பெண்களான அந்த GRO-களின் சேவைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 300 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
சோதனையின் போது அதிகாரிகள் கேட்டதில், தென் கொரியாவில் பிரபலமான சோஜு மதுவை அருந்தி கொண்டு பொழுதுப் போக்கவே அங்கு வந்ததாகக் கூறி பலர் மழுப்பினார்கள்.
அந்த கராவோக்கே மையத்திற்கு அருகில் ஏராளமான உணவகங்களும் தென் கொரிய மொழியில் அறிவிப்புப் பலகைகளும் காணப்பட்டன.
அதை வைத்து பார்க்கும் போது, தென் கொரிய வாடிக்கையாளர்களைக் குறி வைத்தே அம்மையம் செயல்பட்டு வந்திருப்பதை அறிந்துகொள்ள முடிவதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff சொன்னார்.
இந்நிலையில், அக்கேளிக்கை மையத்தின் நிர்வாகியான பெண் உட்பட மொத்தம் 11 தென் கொரியர்கள் கைதாகினர்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாராணைகளுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.