
புத்ராஜெயா, டிசம்பர்-18 – அமைச்சரவை மாற்றத்தில் ஹானா இயோ கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டதை சர்ச்சையாக்கும் தரப்பினரை பிரதமர் சாடியுள்ளார்.
இனம் அல்லது நிறம் அடிப்படையில் ஒருவரை ஒதுக்குவது, அதுவும் இந்த நவீன காலத்தில் கொடூரமான செயல் என, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சில நேரங்களில், நம் மக்கள் சிலருக்கு இருக்கும் சகிப்புத்தன்மையின்மையை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என, செய்தி ஆசிரியர்கள் மற்றும் மூத்த செய்தியாளர்களுடனான சந்திப்புக்குப் பிறகு அன்வார் ஆதங்கத்துடன் கூறினார்.
இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த DAP-யின் ஹானா இயோ, அமைச்சரவையிலிருந்து விடுபட்ட டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃப்பாவுக்கு பதிலாக கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதே சமயம், GRS கூட்டணியின் தாவாவ் நாடாளுமன்ற உறுப்பினர் Lo Su Fui துணையமைச்சர் ஆனார்.
அவ்வமைச்சுக்கு 2 சீனர்கள் நியமிக்கப்படுவதா என பாஸ் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியது குறித்து, அன்வார் கருத்துரைத்தார்.
கூட்டரசு பிரதேச அமைச்சு வரலாற்றில் இதுவரை மலாய்க்காரர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருந்து வந்த நிலையிவ், முதல் முறையாக சீனர் நியமிப்பட்டதானது தலைநகர் வாழ் மலாய்க்காரர்களின் உணர்வுகளை சீண்டும் செயல் எனவும் அவர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.



