
ஈப்போ, டிசம்பர்-2, பேராக், ஈப்போ, Fair Park, Arena Kepayang Putra-வில் குப்பைகள் மற்றும் எண்ணெய்க் கழிவுகள் கலந்த வெள்ள நீரை கடக்க வேண்டிய, மிகவும் அருவருப்பான சூழ்நிலைக்கு, குடியிருப்பாளர்களும் மீட்புப் படையினரும் தள்ளப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வீடமைப்புப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியின் போது, அதனை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக, ஈப்போ மாநகர மன்ற உறுப்பினர் முஹமட் ஹம்சா முஹமட் ஹம்டான் (Muhammad Hamzah Md Hamdan) தெரிவித்தார்.
குப்பை அள்ளும் லாரி, மதியம் வாக்கில் வந்து குப்பைகளை அள்ளியிருக்க வேண்டும்; ஆனால் காலையிலேயே வெள்ள நீர் அப்பகுதிக்குள் புகுந்து விட்டதால், லாரியால் உள்ளே நுழைய முடியவில்லை.
இதனால், வீடுகளின் வெளியே வைக்கப்பட்டிருந்த குப்பைகள் வெள்ள நீரில் மிதந்து, அசௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டதாக ஹம்சா சொன்னார்.
ஆனால், வெள்ள நீரில் எண்ணெய்க் கழிவு எப்படி கலந்தது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
என்றாலும், அருகிலுள்ள உணவகங்கள், பழுதுப் பார்ப்புப் பட்டறைகள் போன்ற வர்த்தகத் தளங்களிலிருந்து வந்திருக்கலாமென அவர் சந்தேகப்படுகிறார்.
அப்பகுதி சுங்கை கிந்தா ஆற்றருகே உள்ளது; இந்நிலையில் எண்ணெய்க் கழிவுகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஹம்சா கூறினார்.
எண்ணெய்க் கழிவுகள் கலந்த வெள்ள நீரில் நடந்ததில், பலருக்கு தோலில் எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.