
கோலாலம்பூர், நவம்பர்-11,
நாட்டின் ஆக மூத்த அரசியல் கட்சியான ம.இ.கா வரும் நவம்பர் 16-ஆம் தேதி தனது ஆண்டு பொதுப் பேரவையை ஷா ஆலாம் IDCC மாநாட்டு மையத்தில் நடத்தவுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு பொதுக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காரணம், 70 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக செயல்பட்ட பிறகு, புதிய திசையை நோக்கி அது பயணமாக வாய்ப்புள்ளது என்பதே…
ம.இ.கா துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், அண்மையில் “Caesar crossing the Rubicon” எனும் வரலாற்றுப் பொருள் வாய்ந்த சொற்றொடரை மேற்கோள் காட்டி, “மீண்டும் திரும்ப முடியாத துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால், தேசிய முன்னணியுடனான மஇ.காவின் பந்தம் முறியும் வாய்ப்பு குறித்த அரசியல் யூகங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது ம.இ.காவுக்கு 3 மூன்று தேர்வுகள் இருப்பதாக மூத்த அரசியல் ஆய்வாளர் எம்.பெரியசாமி கூறுகிறார்.
தேசிய முன்னணியிலேயே தொடருவது, எதிர்கட்சி கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் சேருவது, அல்லது பக்காத்தான் ஹராப்பானில் இணைவது ஆகியவையே அத்தேர்வுகளாகும்.
எனினும் அந்த ஒவ்வொரு முடிவும் தனித்தனியான அரசியல் சவால்களைக் கொண்டுள்ளதை பெரியசாமி சுட்டிக் காட்டுகிறார்.
தேசிய முன்னணியை பொருத்தவரை, மலாய்க்காரர்களின் ஆதரவை அது இழந்துவிட்டது; அந்த பெரும்பான்மை சமூகத்தின் ‘பேராதரவு’ தற்போது பாஸ் கட்சியிடம் சென்றுவிட்டது.
இந்நிலையில் ம.இ.கா பெரிக்காத்தானில் சேர்ந்தால், பாஸ் கட்சி, மலாய்க்காரர் அல்லாத வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்குமா என்ற பெரியக் கேள்வியும் எழாமல் இல்லை.
காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு பாயான் லெப்பாஸ் தொகுதியில் பதிவான முடிவே அதற்கு நல்ல உதாரணம்; அதாவது என்னதான் பெரிக்காத்தான் சார்பில் முஸ்லீம் அல்லாத வேட்பாளர்கள் களமிறங்கினாலும் பாஸ் வாக்காளர்களே அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். அதனால்தான் அங்கு பாக்காத்தான் ஹராபான் மலாய் வேட்பாளர் வென்ரார் பெரிக்காத்தான் சீன வேட்பாளர் தோற்றார்.
நிலைமை இப்படியிருக்க, பக்காத்தான் பக்கமோ DAP-யின் கையே ஓங்கியுள்ளது; ஒருவேளை ம.இ.கா அங்கு போய் சேர்ந்தால் சீனர்களின் வாக்குகளை DAP ம.இ.கா வேட்பாளர்களுக்குத் தருமா என்பதும் கேள்விக் குறியே.
ஆகவே, இதையெல்லாம் கணக்கில் கொண்டே ம.இ.கா ஒரு வியூகமான முடிவை எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது என பெரியசாமி கூறுகிறார்.
அதே சமயம் தேசிய முன்னணியிலேயே நீடித்தாலும், ‘அழையா விருந்தாளி’ போல் நடத்தப்படுவதாக ஏற்கனவே கூறிய வார்த்தைகள் கண்முன்னே வந்து நிற்கும்.
எது எப்படியோ, மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல் பயணத்தை பிரதிபலிக்கும் ம.இ.கா தனது வரலாற்றை மீண்டும் எழுதக்கூடிய முடிவை எடுக்கவுள்ளது மட்டும் நிச்சயம்.
அது வரும் பொதுப்பேரவையில் தெரிய வரும்…



