54 தங்கம்; 2019 சீ போட்டிக்குப் பிறகு அதிக தங்கப் பதக்கங்களைக் குவித்த மலேசியா

பேங்கோக், டிசம்பர்-20 – தாய்லாந்து சீ போட்டியில் நேற்றிரவு வரைக்குமான நிலவரப்படி, மலேசியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 56-ரை எட்டியது.
இதன் மூலம் கடந்த ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு சீ போட்டியில் மலேசியா இம்முறை அதிக தங்கத்தைக் குவித்துள்ளது.
2019 பிலிப்பின்ஸ் சீ போட்டியில் 55 தங்கப் பதக்கங்களை வென்ற நிலையில், இப்போது அதை விட ஒரு தங்கம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
நேற்று மட்டும் ஸ்குவாஷ், முக்குளிப்பு, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் கிடைத்த இரட்டை தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 10 தங்கப் பதக்கங்களை மலேசியா வெற்றிக் கொண்டது.
இதன் மூலம் பதக்கப் பட்டியலில் சிங்கப்பூரை முந்தி மலேசியா நான்காம் இடத்திற்கு முன்னேறியது.
தங்கப் பதக்க இலக்கு எதுவும் இல்லாமல் மொத்தமாக 200 பதக்கங்களோடு நாடு திரும்புவதே தேசிய அணியின் இலக்காக இருந்தது.
இந்நிலையில் இதுவரை 229 பதக்கங்களை வென்று அவ்விலக்கை மலேசியா அடைந்துள்ளது.
அதோடு கோலாலம்பூருக்கு வெளியே நடைபெற்ற சீ போட்டிகளில் இதற்கு முன் மலேசியா ஆக அதிகமாக வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையான 216-ரும் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இதே தாய்லாந்து மண்ணில் 2007-ஆம் ஆண்டு மலேசியா அந்த 216 பதக்கங்களை வென்றது.



