
ஹைதராபாத், செப்டம்பர் 8 – அண்மையில் நடைபெற்ற SIIMA விருது விழா மேடையில், உலகநாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தப் புதிய படம் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்றும் இதுவரை தனித்தனியாக இருந்த தென்னிந்திய இரு துருவங்கள் இப்போது ஒன்றாக சேரவிருக்கின்றனர் என்றும் SIIMA விருது விழாவில் கல்கி 2898 ஏ.டி. படத்தில் நடித்ததற்காக விருது பெற்ற கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
மேலும், ரசிகர்களும் ஊடகங்களும்தான் தங்களுக்குள் போட்டி இருப்பதாக நினைத்துக் கொண்டார்களே தவிர தங்களுக்குள் எந்த போட்டியும் பொறாமையும் இல்லை என்று உலக நாயகன் தெரிவித்தார்.
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஏற்கனவே அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இரு பெரும் நட்சத்திரங்களும் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.