
கோலாலம்பூர், அக்டோபர் 7 –
ம.இ.கா வின் (MIC) துணைத் தலைவர் டத்தோ டி. முருகையா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்தனி கட்டண அமைப்பை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியர்கள் நமது நாட்டுக்குள்ளாகவே அதிக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு விலை வேறுபாட்டு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தற்போது, ஹோட்டல், உணவு மற்றும் பானங்கள், சுற்றுலாத் தள நுழைவு கட்டணங்கள், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் போன்ற துறைகளில் உள்ளூர் மக்களும் வெளிநாட்டு பயணிகளும் ஒரே விலையைச் செலுத்துவது முற்றிலும் அநியாயமானது என்று அவர் கருத்துரைத்தார்.
பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு குறைந்த விலையில் சுற்றுலா வசதிகளை வழங்கும் கொள்கையை நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வருகின்ற அதே வேளை மலேசியாவும் இதேபோன்ற மக்கள் நட்பு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
மலேசியாவுக்குள் பயணம் செய்வதற்கான செலவு, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மற்ற நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு மலிவான விலையில் பயணங்களை மேற்கொள்ள செய்வதோடு உள்நாட்டு சுற்றுலாவை வெகுவாக வளர்த்து வருகின்றன.
இந்நிலையில் உள்ளூர் சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் மலேசியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துள்ளதைத் தொடர்ந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சியும் மந்தமாகி வருவதோடு, வருவாயும் பாதிக்கப்படுகிறது என்பதனை அவர் மேலும் குறிப்பிட்டார்