
கோலாலம்பூர், ஜன 2 – பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவியிலிருந்து விலகிய தனது முடிவை டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நியாயப்படுத்தியுள்ளார். கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் தலைமைத்துவத்தை மறுசீரமைக்கவும் சில சமயங்களில் பின்வாங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெர்சத்துவின் தலைவர் பதவியிலிருந்து விலகிய முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் முன்னாள் பிரதமருமான முஹிடின் யாசின் தெரிவித்தார். நாம் பலவீனமாக இருப்பதாக அர்ததம் இல்லை. மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான கட்சியை உருவாக்கவும் ஒரு படி பின்வாங்க வேண்டியுள்ளது என அவர் கூறினார்.
பெர்லீஸில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, ஜனவரி 1 ஆம் தேதி முதல் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவியிலிருந்து முஹிடின் விலகினார். இதனைத் தொடர்ந்து , பெரிக்காத்தான் கூட்டணியில் இருந்த மற்ற பெர்சத்து தலைவர்களும் தங்களது தலைமைப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட முஹிடின் , தொடர்ந்து பெரிக்காத்தான் பங்காளியாக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
கூட்டணியின் நிலைத்தன்மையை வலுப்படுத்த நீடித்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் . உறுப்பினர்கள் உறுதியாகவும் கட்டொழுங்காகவும் இருப்பதுடன் பரஸ்பர மரியாதை கலாச்சாரத்தை நிலைநிறுத்தி கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் தீர்க்க வேண்டுமென முஹிடின் கேட்டுக் கொண்டார்.



