
புத்ரா ஜெயா , ஜன 8 – பொது சுகாதார புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852) இன் கீழ் 160,839 சம்மன்களை அல்லது குற்றப் பதிவுகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 496,247 வளாகங்களில் சோதனைகளை உள்ளடக்கிய 25,643 அமலாக்க நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டது.
மொத்த சம்மன்களில்,சிறார்களுக்கு எதிரான புகைப்பிடித்தல் சட்டத்தின் கீழ் 67 சம்மன்களும் , தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்ததற்காக 137,568 சம்மன்களும் வழங்கப்பட்டவற்றில் அடங்கும்.
மொத்தம் 2,352 விசாரணைகள் குற்றப்பதிவு வழங்கப்படாத குற்றங்களுக்காக திறக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்தேதி சட்டம் 852 அமல்படுத்தப்பட்டது. அதே வேளையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முழு அமலாக்கம் தொடங்கியது. அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்த நுரையீரல் பாதுகாப்பு நடவடிக்கை திட்டமான (Ops Selamat PaPa) தொடங்கப்பட்டது.
Vape எனப்படும் மின்னணு சிகரெட்டுகள் உட்பட அனைத்து வகையான புகைபிடிக்கும் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையில் இந்த நடவடிக்கை முதன்மையாக கவனம் செலுத்துகிறது.
இது இளைய தலைமுறையினரை அதிகரித்து வரும் புகைப்பிடிக்கும் தயாரிப்பு பொருட்களின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையை கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



