
கோலாலம்பூர், ஜூலை 2 – வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் MyKiosk திட்டத்தை வர்த்தகர்களுக்கு வழக்கிய டெண்டர் அல்லது குத்தகையில் லஞ்ச ஊழல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணையை தொடங்கியுள்ளதாக அதன் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர்
Zainul Darus வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெண்டர் வழங்கப்பட்டதில் லஞ்ச ஊழல் அல்லது முறைகேடு நடந்ததற்கான அம்சங்களை அடையாளம் காண்பதில் MACC கவனம் செலுத்திவருகிறது. ஒட்டுமொத்த நிர்வாக செயல்முறையையும் ஆராய்ந்து, விதிகள், அமைப்புகள் அல்லது நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிப்போம் என்று ஜைனுல் கூறினார்.
250 மில்லியன் ரிங்கிட் உட்படுத்திய நிதி மற்றும் அந்த திட்டத்தின் அமலாக்கம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கடந்த மே மாதம் சிலாங்கூர் ம.சீ.ச இளைஞர் பிரிவு MACC யிடம் புகார் செய்திருந்தது.
குறிப்பிடத்தக்க முதலீடு இருந்தபோதிலும், கியோஸ்க்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ம.சீ.ச இளைஞர் பிரிவின் தலைவர் Tan Jie Sen கூறிக்கொண்டார்.
ஒரு யூனிட் கியோஸ்க்கின் சந்தை விலை 12,800 ரிங்கிட் மட்டுமே இருக்கும் வேளையில் அவற்றிற்கு 25,000 ரிங்கிட் முதல் 34,000 ரிங்கிட் விலையை அரசாங்கம் செலுத்துவது ஏன் என்று பஹாங் ம.சீ.ச இளைஞர் பிரிவு வினவியது. இதனிடையே கியோஸ்க் திட்டம் வெளிப்படையானது என்பதால் அதில் ஊழல் நடந்ததாக கூறப்படுவதை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming மறுத்துள்ளார். அதோடு இந்த முயற்சி வீண் விரயம் என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.