
புத்ராஜெயா, செப்டம்பர் 12 – மலேசிய புள்ளிவிபரத் துறை வெளியிட்ட மலேசிய மகிழ்ச்சி குறியீடு 2024 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மகிழ்ச்சியின் மதிப்பெண் 7.6 ஆக பதிவாகியுள்ள நிலையில் மலேசியர்கள் மகிழ்ச்சியானவர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக அறியப்படுகின்றது.
இந்த குறியீடு உடல், சமூகம், உணர்ச்சி மற்றும் ஆன்மீகம் எனும் நான்கு பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்ட மலேசிய மகிழ்ச்சி கருத்துக்கணிப்பின் மூலம் தயாரிக்கப்பட்டது.
மாநிலங்களின் தரவரிசையில், திரெங்கானு 8.64 என்ற மதிப்பெண்ணை பெற்று முதலிடத்திலும், ஜொகூர் இரண்டாம் இடத்திலும் நெகிரி செம்பிலான் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.
அதே நேரத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகியவற்றுக்கிடையிலான மகிழ்ச்சி மதிப்பெண்களில் மிகச் சிறிய வித்தியாசம் மட்டுமே காணப்பட்டது என்றும் இது, இரண்டிலும் வாழ்வுத் தரத்தில் சமநிலை இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த குறியீடு மாவட்ட மட்டத்தில் வெளிவந்திருப்பது, சமூக புள்ளிவிபரத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் இது கொள்கை வடிவமைப்பாளர்கள் மக்களின் உண்மையான நிலையைப் புரிந்துகொண்டு, துல்லியமான நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்றும் முதன்மை புள்ளிவிபர நிபுணர் உசீர் மாஹிதீன் (Chief statistician Uzir Mahidin) தெரிவித்தார்.