UEC சர்ச்சை: மலாய் மொழி தேர்ச்சி புதியத் தீர்வாகலாம் என்கிறார் ராமசாமி; தேர்தல் அறிக்கை மீறல் நம்பிக்கை துரோகம் என சாந்தியாகோ விளாசல்

கோலாலாம்பூர், டிசம்பர் 15- தனியார் சீன இடைநிலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழான UEC மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது.
அதற்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில், அதனை நிர்வகிக்கும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கமான Dong Zong, ஒரு புதிய வழியைத் தேட வேண்டுமென, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர்Dr பி. ராமசாமி கூறியுள்ளார்.
உதாரணமாக, மலாய் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்குவது போன்ற மாற்றங்கள் UEC அங்கீகாரத்துக்கு வழிவகுக்கும் என, பினாங்கு முன்னாள் முதல்வருமான அவர் பரிந்துரைத்தார்.
இவ்வேளையில், UEC விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கு, தேர்தல் வாக்குறுதி மீறல்தான் என, கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியகோ பக்காத்தான் ஹராப்பானைச் சாடியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் UEC‑ஐ அங்கீகரிக்க வாக்குறுதி அளித்து விட்டு இப்போது பின்வாங்குவது நம்பிக்கை துரோகமாகும் என்றார் அவர்.
நடப்பில் பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான தகுதியாக UEC அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சபா, சரவாக் மாநிலங்கள் ஏற்கனவே UEC‑யை பல்கலைக்கழக சேர்க்கைக்கு அங்கீகரித்துள்ளன.
ஆக, UEC-சை அங்கீகரிப்பதில் பிரச்னை இல்லை என்பது தெளிவாகிறது; இருந்தும் மத்திய அரசாங்கம் இதில் ‘சுணக்கம்’ காட்டுவது ஏமாற்றத்தை அளிப்பதாக சார்ல்ஸ் சாந்தியாகோ சொன்னார்.
ராமசாமி, சாந்தியாகோ என இருவரின் குரல்களும் “அங்கீகாரம் சாத்தியமானது, ஆனால் புத்ராஜெயா தயக்கம் காட்டுகிறது” என்ற ஒரே செய்தியைத் தான் வலியுறுத்துகின்றன;
இது வாக்காளர்களின் நம்பிக்கையை சிதைக்கும்; வாக்குறுதியை காப்பதே உண்மையான தலைமைத்துவம் என இருவருமே வலியுறுத்தியுள்ளனர்.



