
வாஷிங்டன், அமெரிக்கா, டிசம்பர் 16 – நியூயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த ஜெட் ப்ளூ விமானம், வெனிசுவேலா (Venezuela) கடற்கரைக்கருகில் பறந்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க வான்படை ஜெட்டுடன் வானில் மோதும் அபாய நிலை ஏற்பட்டது.
அச்சமயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் வான் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
Curacao-விலிருந்து புறப்பட்ட ஜெட் ப்ளூ விமானம், கடற்கரைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த போது, ஒரு அமெரிக்க வான்படை ஜெட் திடீரென அதே உயரத்தில் மிகவும் அருகில் வந்துள்ளது. அந்த வான்படை ஜெட், தன்னை அடையாளம் காண உதவும் கருவியை இயக்காமல் இருந்ததாக ஜெட் ப்ளூ விமானி கூறினார்.
இதனால் இரு விமானங்களும் வானில் மோதும் அளவுக்கு நெருக்கமாக சென்றதாக அவர் தெரிவித்தார். பின்னர் அந்த வான்படை ஜெட், வெனிசுவேலாவின் வான்வெளிக்குள் பறந்து சென்றதாக கூறப்படுகிறது.
ஜெட் ப்ளூ நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பே முதன்மை எனவும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து விசாரணையில் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.



