இந்தியர்களின் ஆதரவு சரிந்ததற்கு அம்னோவே காரணம்; BN-ல் நாங்கள் வெறும் ‘பயணியாகவே’ நடத்தப்படுகிறோம்: ம.இ.கா

கோலாலம்பூர், நவம்பர்-21 – இந்திய வாக்காளர்களின் ஆதரவை இழந்ததற்கு அம்னோவே காரணம் என ம.இ.கா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வந்த அதிருப்திகள் குறித்து அம்னோவுக்கு பல முறை எச்சரித்த போதும், அவற்றை அது கண்டுகொள்ளவில்லை என, ம.இ.கா தேசிய வியூக இயக்குநர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.
ம.இ.கா மற்றும் அரசாங்கத்தின் மீதான இந்தியர்களின் ஆதரவு 2001 கம்போங் மேடான் இன மோதலுக்குப் பிறகு சரியத் தொடங்கி, 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடுங்கோபமாக மாறியது.
கோயில் உடைப்பு, ஒருதலைபட்சமான மதமாற்றம் மற்றும் சமயத்தின் பெயரால் சடலங்கள் பறிப்பு போன்ற ஒரு சில சம்பவங்களே அவற்றுக்கு உதாரணம்.
‘அம்னோ ஆதிக்கத்தின் கீழ்’ இருந்த அரசு மற்றும் சமய நிறுவனங்களின் கீழ் இவை நிகழ்ந்தன.
பார்க்கப்போனால் 2007-ல் உலக கவனத்தையே மலேசியா பக்கம் திருப்பிய ஹிண்ட்ராஃப் பேரணி கூட ம.இ.காவை மட்டுமே குறிவைத்து மேற்கொள்ளப்படவில்லை; மாறாக இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மீது அம்னோ தலைலையிலான அரசாங்கம் காட்டிய பாராமுகத்திற்கு எதிராக வெடித்த எதிர்ப்பே அதுவென சிவராஜ் சுட்டிக் காட்டினார்.
உண்மையில் தேசிய முன்னணி (BN) கூட்டணியில் ம.இ.கா ஏதோ ஒரு “பயணி” மாதிரி தான் இருப்பதாகவும், தங்களுக்கு அங்கு உரிய மரியாதை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்ந்ததற்கு ம.இ.கா காரணமல்ல…’அது, ஓட்டத் தெரியாமல் ஆபத்தாக வாகனத்தைச் செலுத்தியவர்களால்’ ஏற்பட்ட ஒன்றென சிவராஜ் மறைமுகமாக அம்னோ-தேசிய முன்னணி தலைமையை சாடினார்.
Media Prima முன்னாள் செய்தித் தலைவர் அஷ்ரப் அப்துல்லா எழுதி FMT-யில் வெளியான செய்திக் கட்டுரைக்கு பதிலடியாக சிவராஜ் இந்த காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“ம.இ.கா இந்தியர்களின் ஆதரவைப் திரும்பப் பெறப்போவதில்லை என்பதால் அது ஒரு “சுமையாக” மாறிவிட்டது என்றும், “15-ஆவது பொதுத் தேர்தலில் அது ஒரேயோர் இடத்தை மட்டுமே வென்றது” என்றும் அஷ்ரஃப் கூறியிருந்தார்.
“அதிக எண்ணிக்கையிலான இந்திய வாக்காளர்களைக் கொண்ட பகுதிகளில் வெற்றிப் பெற முடியாததால், ம.இகா இப்போது மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களைச் சார்ந்துள்ளது என்றும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய முன்னணியிலிருந்து வெளியேறுவதை ம.இ.கா நெருங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், ஒரு வாரமாகவே இப்படி அறிக்கைப் போர் அனல் பறந்து வருகிறது.



