
புது டெல்லி, நவம்பர் 17-இந்தியா–அமெரிக்கா இடையேயான வழித்தடங்களில் ஏர் இந்திய விமானங்களில் பயணிப்போரில் சுமார் 30 விழுக்காட்டினர் தற்போது சக்கர நாற்காலியைக் கேட்கின்றனர்.
ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் போதிய உடல் நலத்துடன் இருப்பதாக விமான நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.
வழக்கமான வரிசையைத் தவிர்த்து, சீக்கிரமே விமானத்தில் ஏறுவதற்காக, அவர்கள் இந்த சக்கர நாற்காலி சேவையைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் உண்மையிலேயே உதவி தேவைப்படும் பயணிகள் பாதிக்கப்படுவதாக ஏர் இந்தியா ஏமாற்றம் தெரிவித்தது.
சக்கர நாற்காலிகள் அளவுக்கு அதிகமாக முன்பதிவு செய்யப்படுவதால் விமானப் பணியாளர்களும் சிரமப்படுகின்றனர்.
எனவே, இனி சோதனைகள் கடுமையாக்கப்படும் என எச்சரித்த ஏர் இந்தியா, பயணிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டது.
சக்கர நாற்காலி சேவை உண்மையிலேயே நடக்க முடியாமல் கஷ்டப்படுவோருக்கு மட்டுமே என அது மீண்டும் நினைவூட்டியது.



