
கூலாய், நவம்பர் 19 – நேற்று செலாங்-செனாய் சாலையில், மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில், மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலையில் பயணித்து கொண்டிருந்த காரின் பின்னால் லாரி மோதியதால், அக்காரும் லாரியும் எதிர் திசைக்கு சென்று விட்டன. அதனால் எதிரில் வந்துக் கொண்டிருந்த மற்றொரு லாரியுடன் மோதும் நிலை ஏற்பட்டதென்று கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர், தான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர் திசையிலிருந்து வந்துகொண்டிருந்த 23 வயது நிரம்பிய லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை மோதிய 46 வயதுடைய லாரி ஓட்டுனரும் காரில் பயணம் செய்த ஒரு பெண் பயணியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளனர்.
அதே வேளை கார் ஓட்டுநர் மேலும் இரு பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசாரை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



