
புத்ராஜெயா, டிசம்பர் 23-துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தொடர்பான ஊழல் வழக்கில், DNAA முறையில் அவரை விடுவிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பம், சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக, தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகமான AGC கூறியுள்ளது.
அம்முடிவு, நடப்பு சூழ்நிலையையும் மேலதிக விசாரணை தேவை என்பதையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக AGC விளக்கம் அளித்துள்ளது.
DNAA என்பது குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுதலை அளிப்பதல்ல; போதிய ஆதாரங்கள் கிடைத்தால் வழக்கு மீண்டும் தொடர முடியும் என்பதாகும்.
இந்நிலையில், இந்த DNAA முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் AGC அவ்வாறு கருத்துரைத்தது.
இந்த சீராய்வு மனு, DNAA விண்ணப்பம் செய்யப்பட்டபோது குறிப்பிடப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் மற்றும் முடிவுகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்புகிறது என்று AGC-யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2023 செப்டம்பரில், Yayasan Akalbudi அறக்கட்டளை நிதிகள் தொடர்பான நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்து சாஹிட்டை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் DNAA முறையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.



