
சென்னை, ஜனவரி-11 – பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தலைமையிலான மாநில அரசின் பிரதிநிதிகள், சென்னையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தினர்.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் ஆகியோரும் அதில் பங்கேற்றனர்.
உதயநிதியின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பினாங்கு – தமிழ்நாடு இடையிலான கலாச்சார பரிமாற்றம், சமூக ஈடுபாடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
தமிழர் பரவலின் ஆழமான வரலாற்று பிணைப்புகளும் வலியுறுத்தப்பட்டன.
ஒரு மதிப்புமிக்க மற்றும் நம்பகமான பங்காளியாக தமிழகத்துடனான உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் பினாங்கு அரசின் கடப்பாட்டையும் சுந்தராஜூ அச்சந்திப்பில் உதயநிதியிடம் மறு உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr கலாநிதி வீராசாமியையும் சுந்தராஜு குழுவினர் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பு, குறிப்பாக பினாங்கு – தமிழ் நாடு இடையிலான நீண்டகால வரலாற்று, கலாச்சார மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்த ஆக்கப்பூர்வமான மற்றும் எதிர்கால கலந்துரையாடல்களுக்கு ஓர் அர்த்தமுள்ள தளத்தை வழங்கியதாக சுந்தராஜு குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி அனுசரிக்கப்படும் பிரவாசி பாரதிய டிவாஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளி தினத்தை ஒட்டி, இப்பேராளர் குழுவினர் இந்தியா சென்றுள்ளனர்.



