புத்ராஜெயா, டிசம்பர்-29 – டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கக் கோரும் எந்தவொரு புதிய விண்ணப்பமும், மாமன்னர் தலைமையிலான அரச மன்னிப்பு வாரியத்தின் மூலமாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மற்ற வழிகளில் அல்ல என, தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகமான AGC தெளிவுப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் கூட்டரசு பிரதேசங்களில் செய்யப்படும் குற்றங்களுக்கான மன்னிப்பு விண்ணப்பங்கள், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.
அரச மன்னிப்பு வாரியத்தின் பரிந்துரையின் பேரில், சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு மாமன்னர் எடுக்கும் எந்தவொரு முடிவையும், நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது என AGC சுட்டிக் காட்டியது.
அரச மன்னிப்பு அல்லது வீட்டுக் காவல் உத்தரவைப் பெறுவதற்கான நஜீப்பின் தகுதி பொது விவாதமாகி வரும் நிலையில், சட்டத் துறை அலுவகம் இந்த விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
SRC International ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அந்த முன்னாள் பிரதமர், காஜாங் சிறையில் 12 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.
தனது எஞ்சிய சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவொன்று இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில், நஜீப் அண்மையில் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
முன்னாள் பேரரசருடையது எனக் கூறப்படும் அவ்வுத்தரவை அமுல்படுத்த அரசாங்கத்தை நீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டுமென, நஜீப் கோரியிருந்தார்.
எனினும் அப்படியோர் உத்தரவு இருப்பதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியே; ஆக அனுமானத்தின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாதெனக் கூறி உயர் நீதிமன்றம் அவ்விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.
அதனை எதிர்த்து நஜீப் செய்துள்ள மேல்முறையீட்டை ஜனவரி 6-ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் செவிமெடுக்கவுள்ளது.
என்றாலும், AGC-யின் இவ்வறிக்கையானது, நீதிமன்ற வழியாக இல்லாமல், மன்னிப்பு வாரியத்திடம் நஜீப் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது.