
ஹைதராபாத், ஜூலை-13- நடிகர் விக்ரமின் ‘சாமி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமான மூத்த தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83-ஆவது வயதில் காலமானார்.
நீண்ட காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலை உயிரிழந்தார்.
1978-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நுழைந்த கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் கொடூர வில்லனாகவும் சில சமயங்களில் நகைச்சுவை கலந்த வில்லனாகவும் இரசிகர்களை மகிழ்வித்துள்ள இவர், குணசித்திர நடிகராகவும் பல படங்களில் முத்திரைப் பதித்துள்ளார்.
தமிழில் திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற படங்களிலும் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ், ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் வென்றவருமான கோட்டா சீனிவாச ராவின் மறைவுக்கு, திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.