
லிஸ்பன், செப்டம்பர்-5 – போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில், வரலாற்றுச் சிறப்புமிக்க Gloria funicular கேபிள் இரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
1885 முதல் இயங்கி வரும் இந்த மஞ்சள் நிற கேபிள் இரயில், புதன்கிழமை மாலை உச்ச நேரத்தின் போது வழக்கம் போல் பயணிகளை ஏற்றிச் சென்றது.
அப்போது இரண்டு வண்டிகளில் ஒன்றானது திடீரென தடம்புரண்டு, வீதியைக் கடந்து கீழே உருண்டு சென்று கட்டடத்தில் மோதி சிதைந்தது.
சில பயணிகள் இடிந்த வண்டியிலிருந்து இழுத்து மீட்கப்பட்டனர்; மற்றவர்கள் புகை மூட்டத்தில் ஜன்னல்கள் வழியாக வெளியேறினர்.
ஜெர்மனியைச் சேர்ந்த 3 வயது சிறுவன், ஒரு போலீஸ் அதிகாரியால் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டான். ஆனால், அவனது தந்தை உயிரிழந்தார்; தாய் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள வேளை, போர்ச்சுகல் பிரதமர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அதிகம் பயணிக்கும் இரயிலில் நடந்ததால் இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.