
சிரம்பான், செப்டம்பர் 19 – போர்ட்டிக்சன் கடல் நீரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில் நஞ்சுத் தன்மையின் அளவு 800 பிபிபி (parts per billion) அளவுக்குக் குறைந்துள்ளதாக கோலாலம்பூர் மீன்வளம் உயிர் பாதுகாப்பு மையம் (PBPKL) தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், சிப்பி வகைகளை சேகரிக்கவும், உணவாகக் கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது என்று நெகிரி செம்பிலான் மாநில மீன்வளம் துறை (JPNS) இயக்குநர் காசிம் தவீ கூறினார்.
நச்சு தன்மையின் அளவு ஆபத்து வரம்புக்கு கீழே தாழ்ந்திருந்தாலும், அது தொடர்ந்து குறைந்த நிலையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்ய மேலும் சில மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும்,விசாரணை முடியும் வரை தடை அமலில் இருக்கும் என்றும், போர்ட்டிக்சன் கடல் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் சிப்பி வகைகளை பொதுமக்கள் உணவாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.