
பீனிக்ஸ், ஆகஸ்ட் 27 – கடந்த திங்கள்கிழமை “ஹபூப்” எனப்படும் மாபெரும் மணற்காற்று புயலால் பீனிக்ஸ் நகர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட அந்நகர் முழுவதுமாக மூடப்பட்டு விட்டது.
இதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்ததால், மரங்கள் சாய்ந்து, மின்தடைகள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இப்புயலுடன் சேர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை ஏற்படும் அபாயம் இருப்பதால் தேசிய வானிலை சேவை மையம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் பீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் விமான நிலையத்தில் காற்றின் வேகம் 70 மைல் வரை எட்டியதால் அதன் இணைப்பு பாலம் ஒன்று சேதமடைந்தது என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் விமான போக்குவரத்தில் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதோடு, 60,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவித்தனர்.
இந்த மணற்காற்று புயல் வருவதை தொலைவில் காண முடிந்தாலும் அது நகரும் வேகம் அதிகமாவதால், தங்குமிடம் தேடுவதற்கு கூட சிரமம் ஏற்படுமென்று வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.