
கோலாலம்பூர், ஜனவரி 3 – வீட்டில் நோயாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் வீட்டு பராமரிப்பாளர்கள் இன்னும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் சேர்க்கப்படாமல் உள்ளனர் என்று மனித வள அமைச்சர் டத்தோ ’ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரோக் காரணமாக பாதிக்கப்பட்ட தாயாரை பராமரிக்க, 35 வயதில் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக இருந்த ஆசிரியை நோராயினி தனது பணியை விட்டுவிட்டு மலாக்காவுக்கு திரும்பியுருப்பது இந்த சூழ்நிலையின் பிரதிபலிப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான வருமானம் இன்றி வாழும் நோராயினி, பல வீட்டு பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக அமைச்சர் கூறினார்.
வீட்டு பராமரிப்பு பணி நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பில் முக்கிய பங்கு வகித்தாலும், அது இன்னும் அதிகாரப்பூர்வமான வேலை என அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், பலர் ஓய்வுக்கால சேமிப்புகள் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையை மாற்ற, PERKESO மூலம் செயல்படும் LINDUNG Kasih மற்றும் LINDUNG Kendiri திட்டங்களின் கீழ், வேலை நிலையைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கைச் சிக்கல்களின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வீட்டு பராமரிப்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, அவர்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்குவது அவசியம் என்றும், இது நாட்டின் பராமரிப்பு அமைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



