
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 24 – 2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியை மாற்றும்பொழுது அனைத்து மாணவர்களும், உடல்நலம் மனநலம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான அறிக்கைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வித் துறை தலைமை இயக்குநர் Mohd Azam Ahmad தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, பள்ளிகளில் ஏற்படும் பள்ளி பகடிவதை, பாலியல் தொல்லை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதனைத் தடுப்பதற்காக, கல்வி அமைச்சு (KPM) அறிமுகப்படுத்தும் புதிய பள்ளி பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாகும்.
புதிய நடைமுறையின் படி, மாணவர் முன்பு பயின்ற பள்ளி, அவரின் உடல் மற்றும் மனநல நிலை குறித்த அறிக்கையையும், ஒழுக்கப் பதிவையும் புதிய பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் பின்னணியை அறிந்து, ஆரம்பத்திலேயே தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் கல்வி அமைச்சின் பள்ளி பாதுகாப்புக்கான சிறப்பு குழு, தற்போதைய தேவைகளுக்கு பொருந்தாத நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த செயல்பாட்டில் UNICEF, SUHAKAM, சுகாதார அமைச்சு, சமூக நலத்துறை மற்றும் காவல்துறை ஆகிய அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன.
பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான கற்றல் சூழலை உருவாக்க, பள்ளி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து பொறுப்பேற்கும் வகையில் ‘Aku Janji Sekolah’ என்ற புதிய முயற்சியையும் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



