
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – அனுமதி இன்றி புலி தோலை வைத்திருந்த குற்றத்தில், தொழிலதிபர் Datuk Seri Ng Sing Huat-க்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 300,000 ரிங்கிட் அபராதத்தையும் விதித்துள்ளது. அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 12 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீடு செய்யும் வரை சிறை தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் உத்தரவாதத்துடன் கூடிய 30,000 ரிங்கிட் ஜாமீன் மற்றும் கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் சேர்த்து விதித்துள்ளது.
இந்தக் குற்றம் கடந்த 2022 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று, கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள குடியிருப்பில் நடந்தது. இது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீர்ப்பளிக்கும் போது, நீதிபதி Mohd Zaki Mohd Salleh, காட்டு விலங்குகளிடமும் மனிதர்கள் கருணை காட்ட வேண்டும் என்றும், இந்தத் தீர்ப்பு வன உயிரினங்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எச்சரிக்கையாக அமையும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் PERHILITAN தரப்பு, மலேசியாவில் புலிகள் 5 முதல் 10 ஆண்டுகளில் அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.



