
ஸ்கூடாய், பிப்ரவரி-6 – ஜோகூர், ஸ்கூடாய், தேசிய வகை ரினி தமிழ்ப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவையும் இணைந்து பள்ளி மண்டபத்தில் பொங்கல் விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நாதஸ்வர மேளதாள இசையோடு தொடங்கிய இந்நிகழ்வினை மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவையின் தலைவர் சேகரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அவர் தமதுரையில், தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டினை மாணவர்களின் மனத்தில் வித்திட இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது சாலச் சிறந்தது என பாராட்டினார்.
மாணவர்களிடையே பொங்கல் போன்ற தமிழர் பண்பாட்டினைக் கொண்டு சேர்ப்பதில் ரினி தமிழ்ப்பள்ளி என்றும் முன்னிற்கும் என பள்ளியின் தலைமையாசிரியை சு.தமிழ்ச்செல்வி கூறினார்.
பரதம், நாதஸ்வர படைப்பு, பொங்கல் பற்றிய விளக்கம் மற்றும் உறுமி மேள படைப்பு, பசு மற்றும் கன்றின் வருகை என நிகழ்ச்சி களைக்கட்டியது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து பொங்கல் வைத்தது இந்நிகழ்விற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
மாணவர்களும் உரி அடித்தல், தோரணம் பின்னுதல் மற்றும் சரம் தொடுத்தல் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டு தொடர்ந்து நாவிற்குச் சுவையான பொங்கலும் பரிமாறப்பட்டது.
இது போன்ற கலாச்சார நிகழ்வுகள் தமிழ்ப்பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்குப் புகுத்தப்படுவதனால் தமிழர் பாரம்பரியத்தை என்றும் மறவாமல் அடுத்த தலைமுறையினர் பின்பற்ற இயலுகிறது.
தமிழ்ப்பள்ளிகள் தமிழரின் அடையாளம் என பலரும் உணர இது போன்ற நிகழ்வுகள் பறைச்சாற்றுகின்றது.