
ஈப்போ, ஆகஸ்ட் 26 – வரவிருக்கும் தேசிய தின மாநில அளவிலான அணிவகுப்பை முன்னிட்டு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஈப்போ நகரில் முக்கிய சாலைகள் பல மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்படும் என்று ஈப்போ காவல்துறை தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது (Abang Zainal Abidin Abang Ahmad) தெரிவித்துள்ளார்.
இந்த அணிவகுப்பு ஜாலான் பங்க்லிமா புக்கிட் காந்தாங் வஹாப் (Jalan Panglima Bukit Gantang Wahab) வழியாக தொடங்கி டவுன் ஹால் ( Ipoh Town Hall) முன் நடைபெறும் நிலையில், காலை 6.30 மணி முதல் சாலை மூடல்கள் தொடங்கப்படும்.
இந்தச் சாலை மூடல்களில் ஈப்போ படாங், ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா, ஜாலான் சுல்தான் இஸ்கண்டார் ஷா, ஜாலான் துன் சம்பந்தன் (Little India), ஜாலான் டான் ஸ்ரீ தாஜுடின் அலி, புலாத்தான் பஹாகியா (Medan Kidd), ஜாலான் பங்க்லிமா புக்கிட் காந்தாங் வஹாப் மற்றும் ஜாலான் எஸ்பி சீனிவாசகம் ஆகிய சாலைகள் உள்ளடங்கும்.
அதே நேரத்தில் நாளை மற்றும் வருகின்ற வெள்ளிக்கிழமை ஒத்திகை காரணமாக சாலைகள் மூடப்படும் என்றும் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை பிரதான காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதால் டவுன் ஹால் முன் சாலை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வாகன ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்