
சிரம்பான், பிப்ரவரி-8 – சந்தையில் தேங்காய் விலை 3 ரிங்கிட் 50 சென்னை எட்டியிருப்பதால், நெகிரி செம்பிலானில் வரும் ரமலான் மாதத்தில் தேங்காய் பால் விலையும் உயரக்கூடும்.
சிரம்பான் பெரிய சந்தையில் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தேங்காய் பால் விலை 12 ரிங்கிட்டாக இருப்பது தெரிய வந்தது.
அதுவே pati santan கிலோவுக்கு 13 முதல் 18 ரிங்கிட் வரை விற்கப்படுகிறது.
நட்டத்தைத் தவிர்க்க சில வியாபாரிகள் pati santan-னை விற்பதை நிறுத்தி விட்டதும் கண்டறியப்பட்டது.
வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக 13 ரிங்கிட்டுக்கு விற்றாலும், போட்ட முதல் வருவதில்லை என ஒரு வியாபாரி குறைப்பட்டுக் கொண்டார்.
தேங்காய் பால் 8 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டது; இப்போது 12 ரிங்கிட்டாக உயர்ந்து விட்டது, இனியும் உயருமென அவர் சொன்னார்.
தேங்காய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள் இந்தோனீசியாவிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்கின்றனர்.
இந்தத் தேங்காய் பற்றாக்குறை பிரச்னை தீரும் வரை தங்களின் வியாபாரமும் இலாபமில்லாமல் தான் போய்க் கொண்டிருக்கும் என இன்னொரு வியாபாரி கூறினார்.