
அம்பாங், அக்டோபர்-13 – அம்பாங், யூகே பெர்டானாவில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN நடத்திய கண்காணிப்பில், அங்கு புலிகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை கண்டறியப்படவில்லை.
அப்பகுதியில் புலிகள் நடமாடுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய கண்காணிப்பு நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ளதாக, PERHILITAN தலைமை இயக்குநர் டத்தோ Abdul Kadir Abu Hashim கூறினார்.
யூகே பெர்டானாவில் உள்ள ஸ்ரீ பைடூரி அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி தரை ரோந்துப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ட்ரோன்களைப் பயன்படுத்தி வான்வழி கண்காணிப்பும் நடைபெறுகிறது.
இதுவரை, காட்டுப்பன்றிகள் மற்றும் நாய்களின் தடயங்களே கண்டறியப்பட்டுள்ளன; புலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றார் அவர்.
யூகே பெர்டானா, பார்க்கப் போனால் மலாயாப் புலிகளின் முக்கிய காட்டுப் பகுதி அல்ல; ஆனால் அது, மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் காடுகளின் எல்லையாகும்.
எனவே, இம்மாதம் முழுவதும் கேமரா பொறிகளின் கண்காணிப்பு தொடரும் என அவர் கூறினார்.
முன்னதாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து புலியின் உறுமலைக் கேட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, PERHILITAN படையினர் அங்கு களமிறக்கப்பட்டனர்.



