
புது டெல்லி, அக்டோபர்-26,
இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் கடப்பாட்டை மறுஉறுதிச் செய்துள்ளது.
ஆசியான் பங்காளிகளுடன் இந்தியா எப்போதும் உறுதியாக நிற்குமென்றும், கோலாலம்பூரில் நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஒட்டிய, ஆசியான் – இந்தியா கலந்துரையாடலில் மெய்நிகர் வாயிலாகப் பங்கேற்று உரையாற்றிய போது, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதமளித்தார்.
இந்தோ–பசிஃபிக் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக ஆசியான் நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா உறுதியாக உள்ளது என்றார் அவர்.
ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா சிறப்பாக செயல்படுவதாகவும் மோடி பாராட்டினார்.
இவ்வேளையில், இந்தியா சார்பில்
மாநாட்டில் நேரில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் Dr எஸ். ஜெய்சங்கர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பையும் மக்களுக்கும் மக்களுக்குமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் அன்வாருடன் பேசினார்.
மோடியின் செய்தி, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையேயான நட்புறவையும் பரஸ்பர மரியாதை, பகிர்ந்த மதிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் வலியுறுத்தியுள்ளது.



