
கோலாலம்பூர், நவம்பர் 24-மகளைக் காண 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்தி சனிக்கிழமை நடத்திய அமைதிப் பேரணி, மீண்டும் அரசியல் மற்றும் சமூக கவனத்தை ஈர்த்துள்ளது.
அதை விட கவன ஈர்ப்பு என்னவென்றால் சட்ட சீர்திருத்தங்களுக்கான துணையமைச்சர் எம். குலசேகரன் அதில் பங்கேற்றது தான்…
அவர் ஆதரவு தெரிவித்தது பாராட்டுக்குரியது என்றாலும், அதில் பல கேள்விகள் எழுவதாக DSK எனப்படும் Dinamik Sinar Kasih சமூக நலச்சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறியுள்ளார்.
அதிகாரமில்லாத மக்கள் தான் பேரணி, மறியல் என நடத்துவார்கள்; அதிகாரமுள்ள அதுவும் சட்டத்துறையில் பதவி வகிக்கும் ஒரு துணையமைச்சர் ஏன் அதில் பங்கேற்க வேண்டும்? அதிகாரத்தை வைத்து அமைச்சு அளவிலோ அல்லது குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திலோ கூட அவர் குரல் எழுப்பியிருக்கலாம்.
இந்திரா காந்தி விஷயம் இன்று நேற்றல்ல…16 ஆண்டுகளாக நீடிக்கிறது; குலசேகரன் துணையமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தனை நாளும் அவர் செய்ய வேண்டியதை ஏன் செய்யவில்லை? இன்று திடீரென வந்து இந்திரா காந்தியை தேசியப் போலீஸ் படைத் தலைவர் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறுவதேன்? இவையனைத்தும் தமக்கு ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக சிவகுமார் சொன்னார்.
குலசேகரன் இப்போது எதிர் கட்சியில் இல்லை; ஆளுங்கட்சியில் துணையமைச்சர்….
அப்படியிருக்கையில் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பது ஏன் என மக்கள் கேட்க மாட்டார்களா என சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
ஆட்சி அதிகாரத்தை இந்திரா காந்தி போன்ற மக்கள் நலனுக்காக சரியாகப் பயன்படுத்துங்கள் என அறிக்கை வாயிலாக சிவகுமார் வலியுறுத்தினார்.



