
கோலாலாபூர், ஜூலை-30- தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கு மத்தியஸ்தம் செய்து வைத்த மலேசியாவின் பங்கு குறித்து பாஸ் கட்சித் தலைவர் ஒருவர் செய்துள்ள இழிவான அரசியல் நையாண்டி, நடுநிலை வாக்காளர்கள் மற்றும் மலாய்க்காரர் அல்லாதோரிடமிருந்து, அக்கட்சியை மேலும் அந்நியப்படுத்தி விடும்.
அரசியல் ஆய்வாளர்கள் அவ்வாறு எச்சரித்துள்ளனர். பாஸ் தகவல் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரியே (Ahmad Fadhli Shaari) இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளார்.
வாழைப்பழங்களுக்காக சண்டையிடும் ஓர் ஆட்டுக்கும் ஒரு செம்மறி ஆட்டுக்கும் இடையில் ஒரு குரங்கு நடுவராகச் செயல்படுவது போன்ற கார்டூன் படத்தை அவர் பதிவேற்றியிருந்தார்.
“ஆட்டுக்கும் செம்மறி ஆட்டுக்கும் இடையிலான வாழைப்பழ தகராறில் மத்தியஸ்தம் செய்ய ஒரு குரங்குத் தேவையில்லை” என அதற்கு அவர் தலைப்பும் வைத்தார்.
இதில் நடுவில் குரங்கு என அவர் குறிப்பிட்டது மலேசியாவையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் தான் என்பது அனைவருக்கும் தெரியும். இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அன்வாரை பிடிக்கவில்லை என்றாலும், அனைத்துலக அரங்கில் நாட்டையும் பிரதமரையும் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.
அதுவும் தாய்லாந்து – கம்போடிய எல்லைப் பிரச்னை போன்ற ஓர் உணர்ச்சிகராமன விஷயத்தில் அவ்விரு நாடுகளையும் ‘ஆடுகளைப்’ போல் சித்தரிப்பதும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என, அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டினர்.
பிரதமரை நையாண்டி செய்வதை விடுத்து, அவ்விரு ஆசியான் நாடுகளையும் மலேசியாவின் மத்தியஸ்த முயற்சிக்கு இணங்க வைத்த அன்வாரின் சாதுரியத்தை அந்த பாசீர் மாஸ் எம்.பி பாராட்டியிருக்க வேண்டும்.
இது போன்ற தேவையற்ற நையாண்டிகள், எதிர்கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அரித்து விடும்; இருக்கும் வாக்கு வங்கியிலும் கீறல் விழுந்து விடுமென ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
ஃபாட்லி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற ஒரு பக்கம் குரல் எழுந்துள்ள நிலையில், அவருக்கெதிராக பக்காத்தான் ஹராப்பான் தொண்டர்கள் போலீஸிலும் புகார் செய்து வருகின்றனர். எனினும், மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கு இடமில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.